தெய்வச் செந்தமிழ் வெள்ளத்தை சந்த அணையால் தேக்கி சந்ததமும் சிந்தை மகிழ இனிக்கும் திருப்புகழை நமக்கு வழங்கியவர் அருணகிரிநாத சுவாமிகள் ஆவார் . “பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் என ஓதும் சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழ்” என்று திருச்செங்கோடு திருப்புகழில் அருணகிரியார் போற்றுவார். அவர் காலத்திலேயே பக்தர்களால் “அற்புதம் , அற்புதம்” என்று புகழப்பெற்ற சந்தப்பாமலை திருப்புகழ் என்பதை நாம் அறியும் போது அதன் அருமை பெருமைகளை நாம் அறிய முடியும்.
“அருணகிரிநாதர் வாழ்வு ஒரு அனுபவப்புதையல்” ஆகும். அவர் தன் வாழ்க்கையில் என்னென்ன துன்பத்தை அடைந்தாரோ அந்தந்த துன்பத்தின் நிழலையும், அவர் என்னென்ன இன்பத்தை அடைந்தாரோ அந்த இன்பத்தின் ஒளியையும் ஒருசேர அவரது நூல்களில் காணலாம்.
நம்மமைப் போல இருந்த ஒருவர் ஒளிமயமான திருவருளைப் பெற்று இன்பம் அடைந்தார். நாமும் அந்த நிலையை முயன்றால் அடையலாம் என்பதையே அவர் திரும்பத்திரும்ப தனது பாடல்களில் குறிப்பிடுகிறார்.
ஒளி பெறுவோம்.