விநாயகர் துதி
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன் விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர் சிறு பாலை திருடிகொடு போக
இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
அசலுமறி யாமல் அவரோட
அகல்வதென டாசொல் எனவு முடி சாட
அறிவருளும் ஆனை முகவோனே
உரை:
நஞ்சு பொருந்திய கடல், அமரர் படை, சூலம், அருச்சுனன்
விடும் பாணம் எனக் கூறும்படியான…
கண்களையும் மிக்க பாரவிதமான (கொங்கைகளையும்)
உடைய மாதர்களின் செயல்களால் வரும் விளைவுகள்
ஒன்றையும் (ஆய்ந்து) அறியாமல்;
மணம் வீசும் பாயலில் பகல் இரவு எனப் பாராமல் கலவி
(யின்பத்தில்) மூழ்கிப் பயனற்ற…
கீழ்மகனும் அறிவீனனுமாகிய இவனும் (உனது) உயர்ச்சி
மிக்க திருவடி யிணைகளைச் சேர அருள் புரிவாயாக
இடையர்கள் கொஞ்சம் பாலை (அல்லது இடையர்களின்
சிறு பெண்) திருடிக்கொண்டு போக அரசன் மகள்
(நடந்த) உண்மை வரலாற்றை அறியாமல்.
நெஞ்சம் மிக வாடி ‘என்னை ஆண்டருளும் பிள்ளைப்
பெருமானே! கணபதியே!’ என்னும் நாமங்களை
வரிசைப் படக் கூற, (அவள் முறையீட்டுக்கு இரங்கி
அந்தப்)
பகைவர்கள் உயிர்க்கு அஞ்சும்படியாக நீ அடி எடுத்து வர
(நீவரும் அடி ஒலியைக் கேட்ட அவர்கள்) அயலார்
அறியாமல் ஓட…
போவது ஏனடா – சொல் எனக் கூறி அவர் தம் முடிகளைத்
தாக்கி (அவர்களுக்கு) அறிவு ஊட்டிய ஆனைமுகவனே!
(உன் கழலிணைகள் சேர அருள்வாயே.)
நன்றி :- வ.சு. செங்கல்வராய பிள்ளை
புதிய சிந்தனை
திருப்புகழ் காட்டும் அறிவு
இந்தத் திருப்புகழில் அருணகிரி பெருமானார் தான் பாட இருக்கும் தமிழ்ப் பாக்களில் எவைகள் எல்லாம் குறிப்பிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருந்தாலும், விநாயகப் பெருமானை அடையாளப்படுத்தும் இந்தத் திருப்புகழில் இப்படிப்பட்ட வேண்டுகோள் தேவையா என்று கூட தோன்றும். முதல் நான்கு வரிகளில் விலை மாதரின் விவரங்களைச் சொல்லுகிறார். ஏன் எடுத்த எடுப்பிலேயே தன் இனத்தின் இழி நிலையை கோடிட்டு, இதைக்கூட ஏன் இறைவனிடம் சொல்ல வேண்டும்? சொன்னது மட்டுமல்லாது தன் இனம் தான் செய்யும் வினையின் விளைவை அறியாமல் இருப்பதைச் சொல்லுகிறார். தான் திருப்புகழ் பாடிய காலத்தில் தன் இனத்தை மேவி இருக்கக் கூடிய அவலங்களை ஒருபாடு குறிப்பிட்ட ஐயா அவர்கள் விநாயகரிடம்
“கயவனறிவீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே”
என்று வேண்டுகிறார். அருணகிரி பெருமானார் பாடலில் அப்பொழுது இருந்த இனமானது சிற்றின்பத்தில் சிக்கி பிறப்பின் நோக்கம் அறியாமல் வினைப்புழுக்களாக வாழ்ந்து வினையின் விளைவேதும் அறியாமல் வாழ்ந்ததை சுட்டிக் காட்டிய ஐயா, இதற்காக தன் இனத்தை கை விட்டு விடாதே என்று சொல்லி இவனும் உன் திருவடியைச் சேர அருள் செய்ய வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் வேண்டுகிறார்.
இந்தத் திருப்புகழில் அருணகிரியார் “அறிவருள்” என்று குறிப்பிட்டுள்ளார். அறிவு என்பது இயற்கையாக ஆன்மாவுக்கு அளித்த ஒரு ஆற்றல். அதாவது அறிவு, இச்சை, செய்கை. அறிவு களங்கப்படாமலிருக்க வேண்டும். அறிவு எதனால் மெலிவடைகிறது என்று அடையாளப்படுத்திய ஐயா, இந்த இனம் அறிவு மழுங்கி வீணே மடிவதைப் பார்த்து விநாயகரிடம் அறிவருள வேணும் என்கிறார்.
சிந்தித்தவர்:- திருப்புகழ் அருட்செல்வர் சேது முருகபூபதி
(நீதிபதி ஓய்வு)