புதுவை மாநிலம் திருவாண்டார் கோயில் (வடுகூர்) திருப்புகழ்

அரியய னறியா தவரெரி புரமூ

ணதுபுக நகையே                                                                                                   வியநாதர்

அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ

றழலையு மழுநேர்                                                                                              பிடிநாதர்

 

வரைமக ளொருகூ றுடையவர் மதனா

கமும்விழ விழியே                                                                                             வியநாதர்

மனமகிழ் குமரா எனவுன திருதாள்

மலரடி தொழுமா                                                                                                  றருள்வாயே

 

அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்

அவனியை வலமாய்                                                                                          வருவோனே

அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்

அயில்தனை விசையாய்                                                                                  விடுவோனே

 

வரிசையொ டொருமா தினைதரு வனமே

மருவியொர் குறமா                                                                                             தணைவேடா

மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்

வருதவ முநிவோர்                                                                                              பெருமாளே

உரை

திருமாலாலும், பிரமனாலும் காணமுடியாதவர், நெருப்பு புரம் மூன்றிலும் புகும்படித் தமது சிரிப்பை ஏவிய தலைவர் -(புரம் மூன்றையும் சிரித்தெரித்த தலைவர் என்றபடி)

விளங்கும் சடைமீது ஒரு மாது கங்கையைக் கொண்டவர், (பதி) கடவுள், (அல்லது – கங்கையாம் மாதின் (பதி) தலைவர்), காய்ந்து வந்த நெருப்பையும் மழு ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்தியுள்ள தலைவர் –

மலைமகள் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர், மன்மதனுடைய உடலும் (எரிபட்டுவிழ ) கண்ணினின்றும் (தீயை)ச் செலுத்தின தலைவர் –

மனம் மகிழும் குமரனே! என்று உன்னுடைய இரண்டு தாளாகிய மலர்ப்பாதங்களை தொழும்படியாக அருள் புரிவாயாக.

அருமை வாய்ந்த ( கிரவுஞ்ச ) கிரி இரண்டு கூறாகப் பிளவு படும்படி (செய்து) ஒப்பற்ற மயில்மேலே (ஏறி) உலகை வலமாக வந்தவனே!

தேவர்களோடு பகைமை பூண்டிருந்த பெரிய அசுரர்களின் தலைகள் மீது வேலாயுதத்தை வேகத்தொடு செலுத்தினவனே!

(வரிசையொடு) நல்ல நிலையில் ஒப்பற்ற சிறந்த (தினை தரு வனமே) தினை வளரும் காட்டுக்குச் சென்று ஒப்பற்ற குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே!

மலையிடங்களிற் ப்ரீதி கொண்டவனே ! (மனம்) பொருந்தி நல்ல வடுகூர் என்னும் தலத்தில் வருகின்ற தவமுநிவர்களின் பெருமாளே!

(மலரடி தொழுமா றருள்வாயே)

நன்றி - வ.சு. செங்கல்வராய பிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *