விநாயகர் துதி
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நினறய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்பனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே
உரை:
(முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், (சேவற்) கொடி
(இவைகளை) நினைவிற் கருதும் அறிவை (நான் பெற)
வேண்டி, நிரம்பச் செய்யப்பட்ட அமுது, முப்பழம்,
அப்பம், பொருந்திய பால், தேன்-
நீண்டு வளைந்த முறுக்கு, கரும்பு, லட்டு, நிறமும் ஒளியும்
உள்ள அரிசி, பருப்பு, அவல், எள், பொரி, ஒப்பற்ற
இனிய வாழைப்பழ வகைகள் இளநீர் (இவைகளை)
மனமகிழ்ச்சியுடன் தொடும்(திருக்) கரத்தையும், ஒப்பில்லாத
மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும்
உடைய, (புகழ்) வளரும் யானை முகத்து ஒற்றைக்
கொம்பனை (விநாயகரை) வலம் வந்து
பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), சிறப்பித்துக் கூறும்
தோத்திரச் சொற்கள் கொண்டு (துதித்தும்), தூக்கிய
கைகளால் (குழைக்) காதைப் பிடித்துக் கொண்டு
தோப்பணம் குட்டு (முதலியன) செய்தும், அவரது
தாமரை போன்ற சிலம்பு அணிந்த அழகிய பதங்களில்
அர்ச்சனை (செய்வதை) மறவேன்;
தெனன தெனதென தெத்தென எனப் பல சிறிய ஈக்கள்
மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்த
மாமிசக் குடல், நெருங்கிய மூளை,
நிரம்பிய அவ் வயிற்றில் நிறைந்து மிக்க குடல் வரிசைகள்,
ஒலி-இவை நிறைந்த (போர்க்) களத்திலே திமித திமிதிமி
(என ஒலிக்கும்) மத்தளம், இடக்கை என்னும்
வாத்தியங்கள் செக சேசே
என ஒலிக்க, துகு துகு துத் என்னும் ஊது குழலுடன்
உடுக்கைப் பறைகள் இடியென மிக ஒத்து முழங்க, டிமுட
டிமு டிமு டிட்டிம் என மேள ஓசைகள் எழ
(ஒன்றோடொன்று) பகைத்த பேய்கள் கைப்பறை கொட்ட,
ரண பயிரவி (என்னும் தேவதை போர்க்களத்தில்)
சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்த அசுரர்களை
அழித்தருளிய பெருமாளே!
(உனது திருவடி முதலானவற்றைக் கருதும் அறிவைப்
பெறவேண்டிக் கணபதியை அர்ச்சிக்க மறவேன்)
நன்றி :- வ.சு. செங்கல்வராய பிள்ளை
புதிய சிந்தனை
திருப்புகழ் காட்டும் அர்ச்சனை
இந்தத் திருப்புகழில் அருணகிரி பெருமான் சொல்ல முயல்வது என்னவெனில் இறைவனை அர்ச்சிப்பதில் இருந்து மறக்கக் கூடாது. ஏன் ஐயா அர்ச்சனையை இவ்வளவு சிறப்பாகச் சொல்கிறார்? அர்ச்சனை என்ற சொல்லுக்கு சொல்லால் வழிபடுவது என்று பொருள். சொல்லால் வழிபட்டால் என்ன நிகழும்? அர்ச்சனை இறைவனை நாம் மறக்காமலிருக்கத் துணை செய்யும். நம் வாழ்க்கையில் அதிகமான தவறுகள் நாம் செய்வது நம்மை நாம் மறந்ததினால். மறதி என்பது ஐந்து வித மலங்களில் ஒன்று. ‘த்ரேதா’ மலம் என்று சொல்வர். நமது சமுதாயத்தில் இன்று பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு, தன்னை மட்டும் அல்லாது இறைவனை மறந்து வாழ்ந்ததினால்தான். மறதி என்ற மலம் இந்த இனத்தைச் சூழ்கிறது.
முழுமுதற் கடவுளான விநாயகரிடம் உன்னை மறக்கக் கூடாது என்று சொல்கிறார். முழுமுதற் கடவுளான விநாயகர் மூலாதாரத்தின் அதிபதி. மூலாதாரம்தான் தனிமனித ஒழுக்கப்படி செயல்படும் ஆதாரம். விந்து உருவாகும் இடம். அங்கேதான் துரியா அதீதம் என்ற குண்டலினி உள்ளது. அதை முழுமைப்படுத்தி பிராண வாயுவோடு சேர்த்து மதிமண்டலத்தில் உள்ள சுழுமுனைவரை பிசகாமல் கொண்டு செல்ல அங்கே தன்னை அறியும் ஞானம் என்ற அறிவுக் கொடி ஆட, அது ஆன்ம உய்வுக்குப் பயன்படும் என்றும் அதற்குத் துணை செய்வது இறைவனின் நாமங்களைச் சொல்லுவது என்ற அர்ச்சனையாகும். அதனால் ‘அர்ச்சனை மறவாதே” என்கிறார்.
சிந்தித்தவர்:- திருப்புகழ் அருட்செல்வர் சேது முருகபூபதி
(நீதிபதி ஓய்வு)