வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்:-
******************************************
பிறப்பு:-
*********
கொங்குநாட்டில் பவானி என்ற சிவத்தலம் உண்டு. அதன் அருகிலுள்ள பூதநாச்சி கிராமத்தில் சிதம்பர ஜோதிடர், லட்சுமி அம்மாள் தம்பதியர் வசித்தனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஒருமுறை லட்சுமி அம்மாள் முன் ஒரு நாகம் படமெடுத்து ஆடியது. அதற்கு கற்பூரம் காட்டியவுடன் மறைந்துவிட்டது. அந்த ஊருக்கு அருகிலுள்ள நாககிரி எனும் திருச்செங்கோட்டு மலைக்குத் தம்மை வருமாறு அழைக்கத்தான் அந்த நாகம் வந்ததோ என்று எண்ணிய தம்பதி, விரத நியமங்களுடன் பன்னிரண்டு அம்மாவாசை தினங்களில் திருச்செங்கோட்டுக்குச் சென்று, ஆண்டவனைத் தரிசித்து வந்தார்கள். இறைவன் அருளால் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து, 1870 ஆம் ஆண்டு நவம்பர் 25 ல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அர்த்தநாரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
இளமைப் பருவம்:-
***********************
இளம் பருவத்திலேயே தந்தையை இழந்தார் அர்த்தநாரி. படிப்பில் நாட்டமில்லை. மல்யுத்தம், சிலம்பம் முதலியவைகளைக் கற்றார். இளமையிலேயே மைசூரு சென்று விட்டதால் தமிழ் தெரியாமல் போனது. ஒன்பது வயதிலேயே அர்த்தநாரிக்கு திருமணம் நடந்தது. மனைவியைக் காப்பாற்ற மைசூரு அரண்மனையில் சமையல்காரராக பணிபுரிந்தார். அப்போது இறைநாட்டம் இல்லை. 22 வயதில் மைசூரில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்றார். அத்திருமணத்தில் பெண்ணிற்கு தாலிகட்டும் சமயத்தில் மாப்பிள்ளைக்கு வலிப்பு வந்துவிட்டது. எனவே, பெண் வீட்டார் அந்த மாப்பிள்ளையை ஏற்க மறுத்து, திருமணத்திற்கு வந்த அர்த்தநாரிக்கு பெண்ணைக் கொடுத்து விட்டனர். இரண்டாம் திருமணம் நடந்த மூன்று வருடங்களுக்குள்ளாக முதல் மனைவியும், அவருடைய மூன்று குழந்தைகளும் இறந்து விட்டனர். இதையடுத்து சில நாட்களில் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் ஒரே நாளில் இறந்து விட்டனர். இதனால் அர்த்தநாரிக்கு தாளாத துக்கமும், வாழ்க்கையில் வெறுப்பும் ஏற்பட்டது. பட்ட காலிலேயே படும் என்பதற்கேற்ப அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது.
பழனிக்கு வருதல்:-
********************
வயிற்று வலிக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. அரண்மனையில் இருந்த வேலைக்காரனின் சொல்படி, தன் இரண்டாவது மனைவியுடனும், எஞ்சியிருந்த ஒரே மகன் நரசிம்மனுடனும் அவர் பழநிக்கு வந்தார். 48நாட்கள் அபிஷேகப் பால், நிவேதன பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு வந்த அர்த்தநாரிக்கு முருகன் அருளால் வயிற்றுவலி நீங்கியது. நான்கு வருடங்கள் அங்கேயே தங்கி கோயிலில் கூட்டி மெழுகுவது, மலர் பறிப்பது ஆகிய கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.
திருப்புகழில் ஈடுபாடு:-
************************
ஒருமுறை, மதுரையிலிருந்து பழநி வந்த தேவதாசி, திருப்புகழ் பாடல் ஒன்றைப் பாடி நடனமாடினாள். பாடலைக் (“வங்கார மார்பிலணி “…திருச்செங்காட்டங்குடி ) கேட்ட அர்த்தநாரி தன்னை மறந்தார். ஆனந்தக் கண்ணீர் பெருகியது. முருகன் அந்தத் திருப்புகழ் மூலம் அர்த்தநாரியை ஆட்கொண்டு விட்டார். தமிழ் தெரியாத அர்த்தநாரி திருப்புகழை எப்படிப் படிப்பது என்று வருத்தம் கொண்டார். ஒரு சிறுவனின் உதவியுடன் தமிழ் படித்து திருப்புகழ் பாடும் திறன் பெற்றார். அவரை மைசூரு சாமி என மக்கள் அழைத்தனர்.
திருவண்ணாமலை மற்றும் வடஇந்தியப் பயணம் :-
********************************************************
1912ல் அவர் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி ஆசி பெற்றார். பிறகு, நான்கு ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் யாத்திரை செய்தார். 1916-ஆம் ஆண்டில் மீண்டும் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.
ரமண மகரிஷியின் கட்டளையும் / சேஷாத்ரி சுவாமிகளின் உத்தரவும்:-
*****************************************************************************
திருவண்ணாமலைக்கு திரும்ப வந்ததும் பவழக்குன்றில் இருந்த ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார். இவரைப் பார்த்ததுமே கீழே போங்கள், சீக்கிரம் எனக்கட்டளையிட்டார் ரமண மகரிஷி. வந்ததும் வராததுமாக எதற்குத் தம்மை கீழே இறங்கச் சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே, இதோ போகிறேன் என்று கீழே இறங்கினார் அர்த்தநாரி. அப்போது, அங்கிருந்த மகான் சேஷாத்ரி சுவாமிகள் இவரை அன்புடன் வரவேற்று, உமக்குத் திருப்புகழ்தான் மகா மந்திரம். வள்ளி மலைக்குச் செல்! என்று உத்தரவிட்டார். அதன்பிறகே ரமணர் திருவண்ணாமலையிலிருந்து அவரை வெளியேற்றியதன் அர்த்தம் புரிந்தது.
வள்ளிமலைக்குச் செல்லுதல்
**********************************
சென்னை- பெங்களூரு ரோட்டில் உள்ள திருவல்லம் என்ற ஊரிலிருந்து 12கி.மீ., தொலைவில் வள்ளிமலை உள்ளது. திருமாலின் மகளான வள்ளி, பூலோகத்தில் நம்பிராஜனின் மகளாக வேடர் குலத்தில் பிறந்து, தினைப்புனம் காத்து, தவமிருந்து முருகனை மணந்த பகுதியே வள்ளிமலை. முருகனின் புனிதப்பாதங்கள் பட்ட அத்தலத்திற்குச் சென்று தங்கிய அர்த்தநாரி, தவவாழ்வில் ஈடுபட்டார்.
வள்ளிமலையில் பர்வதராஜன் குன்றுக்கும் கன்னிக் குன்றுக்கும் இடையே தமது திருப்புகழ் ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு, அங்கு வரும் அனைவருக்கும் திருப்புகழை ராக, தாளங்களுடன் போதித்து வந்தார். அவரது புகழ் வேகமாக பரவியது. வள்ளிமலை சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்றெல்லாம் மக்கள் அவரை அன்போடும் பக்தியோடும் அழைக்கலாயினர்.
ஜனவரி முதல் தேதி திருத்தணி திருப்படி திருவிழா:-
**********************************************************
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், ஜனவரி முதல் தேதியன்று ஆங்கிலேய அதிகாரிகளைப் பார்த்து வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் நம் மக்களிடையே இருந்துவந்தது. அரசாங்கத்தில் பணிபுரிவோர் தங்கள் உத்தியோக உயர்வு மற்றும் மேல் அதிகாரிகளிடம் நட்பையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கும் நிமித்தமாக பூமாலைகள், இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றுடன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இப்படி வருடத்தின் முதல் தேதியன்று அடிமை போன்று ஆங்கில துரையின் காலில் ஏன் விழ வேண்டும்? அதே தினத்தில், திருத்தணிகையில் அருள் வழங்கும் நம் தணிகைமலைத் துரையைத் தரிசித்து, வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புறலாமே என்ற சிந்தனையில், 1917ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி, முருகன் அடியார்கள் ஆறு பேரை அழைத்துக்கொண்டு தணிகைமலை துரையை தரிசிக்கக் கிளம்பினார் வள்ளிமலை சுவாமிகள். இப்படி, 1918 ஜனவரி முதல் தேதியன்று ஆரம்பித்த திருத்தணி திருப்படி விழா என்னும் இயக்கம், இன்று ஒவ்வொரு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதல் தேதியன்று தணிகைமலை வேலனைக் கண்டு தொழ இலட்சக்கணக்கில் பக்தர்களை கூடவைத்திருக்கின்றது. திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே என்று பாடிய அருணகிரிநாதரின் வாக்கை மெய்ப்பிக்கிறது இது. திருத்தணி மட்டுமா… மலைத் தலங்கள் அனைத்திலும் திருப்புகழ் பாடி திருப்படி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இப்படித் திருப்புகழ் பாடிக் கொண்டு மலைப்படியேறி திருப்புகழ்த் திருவிழாவை ஆரம்பித்து வைத்த பெருமைக்கு உரியவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்.
திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை:-
**********************************************
வள்ளிமலை சுவாமிகள் தவம் செய்த இடம் திருப்புகழ் ஆஸ்ரமம் என்ற பெயரில் அன்னம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கிறது. அவரது வள்ளி கல்யாண உபன்யாசம் மிகவும் பிரசித்தமானது.
திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை என்ற நூலையும் தொகுத்து சுவாமிகள் வெளியிட்டுள்ளார்கள்.
திருப்புகழை மகாமந்திரமாகக் கொண்டு, அதனை ஓயாது ஓதி , அடியார்களது மனக்கவலைகள் நீங்கவும், வியாதிகள் நீங்கவும் வழி பிறக்கும்படி சுவாமிகள் செய்துள்ளார்கள்.
வேல்மாறல் என்னும் வேல் வகுப்பு பாராயணம்:-
******************************************************
அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள “வேல் வகுப்பு” பாடலின் 16 அடிகளை முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு “வேல் மாறல்” பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை சுவாமிகள்.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; தீவினைகள் நீங்கும் ; தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!
வள்ளிநாயகியின் தரிசனம்
*******************************
வள்ளிமலையில் , சுவாமிகளுக்கு வள்ளிநாயகி ஒருமுறை காட்சியளித்தாள். தனது பெயரை பொங்கி என எழுதிக்காட்டினாள். சுவாமிகள் அதன் பிறகு, வள்ளி சிலை ஒன்றை வடித்து அதற்கு பொங்கி வைஷ்ணவி என திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். வள்ளியம்மை “விரகற நோக்கியும்” என்னும் அற்புதமான திருப்புகழை மோகனராகத்தில் பாடி வள்ளிமலை சுவாமிகளுக்கு அருளியுள்ளார்.
1941-ஆம் ஆண்டு முதல், சென்னையிலும் வள்ளிமலையிலும் சுவாமிகள் வசித்து வந்தார். சென்னை வடதிருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆஸ்ரமத்தில் வைஷ்ணவியை பிரதிஷ்டை செய்தார். ஆண்டுதோறும் நவராத்திரி விழா அங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1950-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஸ்ரீ ரமண மகரிஷி மகா சமாதியடைந்தார். அதே ஆண்டு 22.11. 1950 அன்று கார்த்திகை அஸ்வினி, திரயோதசியில் வள்ளிமலை சுவாமிகள் முருகப்பெருமானின் திருவடிகளை அடைந்தார். வள்ளிமலையில் எந்தக் குகையில் அவர் அதிக காலம் தவம் செய்து திருப்புகழ் பாடிக் காலம் கழித்தாரோ, அதே குகையில் அவரது சமாதி அமைந்துள்ளது.
இத்தலத்தில் அருணகிரிநாதர் பாடிய பதினோரு திருப்புகழ் பாடல்கள் கிடைத்துள்ளன.
ஓம் சரவணபவ!
Kanmani Ravi, Govindaradjou Venougobalasamy மற்றும் 11 பேர்
9 கருத்துகள்
4 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்