அருணகிரிநாத அடிகள் வரலாறு
பிறப்பும் இளமையும் :
முருகப் பெருமானிடம் ஆழ்ந்த பற்றுள்ளம் கொண்டு வாழ்ந்த அருணகிரிநாத அடிகள் வரலாற்றை அவர் இயற்றிய திருப்புகழ் முதலிய நூல்களைக் கொண்டும் செவிவழிச் செய்திகளாக வழங்கப் பெறுவன கொண்டும் அறியலாகும்.
வண்ணப் பாக்களை இயற்றுவதில் வல்லுநராக விளங்கிய அருணகிரிநாத அடிகள் பிறந்த ஊர் திருவண்ணாமலை.காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி. அவர் காலத்து அரசன் பிரபுடதேவ மாமன்னன் என்பன அறியப்படுகின்றன.
கல்வி:
இவர் இளமையில் தேவாரம், திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, திருக்குறள், யாப்பருங்கலக்காரிகை முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றனர். சிற்றிலக்கியங்களாகிய உலா, ஏசல், கலம்பகம், கோவை, சிந்து, தூது, பரணி, மடல், மாலை முதலியவற்றிலும் பயிற்சி பெற்றனர்.
‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”
“தவமும் தவமுடையார்க் காகும்”
என்று திருவள்ளுவர் கூறிய நல்லுரைகளுக்கு ஏற்பக் கல்வியறிவினால் விளங்கியது மட்டுமன்றி முருகப்பெருமானிடத்தும் அழுந்திய பற்றுள்ளங் கொண்டு விளங்கினார்.
வறுமையும் பிணியும் :
ஊழ்வினை வயத்தால் பரத்தையர் மயலிற்பட்டுத் தம் பொருளை இழந்தார். பொருளுடையாரிடம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி அவ்வழியிற் கிடைத்த பொருளையும் வேசியர் பொருட்டே செலவழித்தார். அதனால் வறுமையும் பொல்லாப் பிணியும் அடையப் பெற்றார்.
பின்னர் அருணை இறைவன் போன்ற தவப் பெரியார் ஒருவர் இவர் முன் தோன்றி இவர்படும் துன்பத்தினைக் காணப்பொறாது, இரக்கங்கொண்டு மிக்க அன்புடன் ‘அன்ப நீ முருகப் பெருமானை இடையறாது நினைத்து வழிபடும் தவநிலையை மேற்கொள்க” எனக் கட்டளை இட்டு மறைந்தனர். அம் மொழிகளின் பெருமை உணராது இவர் நோய்த் துன்பத்தினின்றும் நீங்கும் வழியறியாது தம்முயிர் விடுதலே சாலச் சிறந்ததென நினைத்துத் திருவருணைத் திருக்கோயிலின் கோபுரத்தின்மேல் ஏறித் தம் உயிரை மாய்க்கக் குதித்தனர்.
அருள் பெறுதல் :
அவ்வேளை முருகப் பெருமான் முனிவர் வடிவத்தில் வந்து தம் திருக்கையால் தாங்கி அருணகிரியாரைக் காப்பாற்றினர். மயிலின் மீது தோன்றித் தமது நடனக் காட்சியளித்தனர். அருணகிரியார் நாவில் தம் வேல்கொண்டு தம் ஆறெழுத்தைப் பொறித்தனர். அக்கமணி மாலை ஒன்றும் அளித்தனர்.
‘சும்மா இரு சொல்லற” – என்னும் மௌனவழியைக் கூறினர். அருள் ஞானம் பெறச் செய்தனர்.
‘முத்தைத்தரு பத்தித் திருநகை” என அடியெடுத்துக் கொடுத்துத் திருப்புகழ் பாடுமாறு கட்டளையிட்டனர்.
அருணகிரியார் தாம் பெற்ற பேறுகளை நினைத்து மகிழ்ந்து திருவருணையில் உள்ள கோபுரத் திளையனார் கோவிலில் தவநிலையில் இருந்தனர்.
திருவருணை இறைவன் இவர்முன் தோன்றித் திருநீறு அளித்து ‘நின்துயர் ஒழிக” என வாழ்த்தினர். உண்ணாமுலை அம்மையும் இவர்முன் தோன்றி ‘நின் பிறப்பு ஒழிக” என வாழ்த்தி அருள்புரிந்தனர். வள்ளியம்மையாரும் தம் திருக்கையால் இவர் தலையைத் தொட்டு வாழ்த்தினர். இவர் பின்னரும் பல நாள் அத்திருவூரிலே யிருந்து தவம் செய்து வந்தனர். இடையிடையே வண்ணங்கள் அமைந்த திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி அவ்வூர் மக்களால் பாராட்டப் பெற்றனர்.
திருவண்ணாமலைப் பகுதியை அக்காலத்து ஆண்டு வந்த ‘பிரபுடதேவ மாமன்னன்” இவரிடம் சிறந்த மதிப்பும் அன்பும் கொண்டு விளங்கினான். அக்காலத்தில் அன்னை உண்ணாமுலை அம்மைமீது பற்றுடையவன்போல் காட்டி மக்களையும் மன்னனையும் தன் வழிப்படுத்தி வந்த ‘சம்பந்தாண்டான்” என்பவன் அருணகிரிநாத அடிகளின் புகழை அறிந்து பொறாமை கொண்டான்.
ஒரு நாள் மன்னனிடம் சென்று, மன்ன, எங்கள் இருவரில் யாவர் தாம் வழிபடும் கடவுளை வரவழைத்து அவையின் முன் காட்டுகின்றனரோ அவரே சிறந்தவர் ஆவர், என்றான். அதனைக்கேட்ட மன்னன் சம்பந்தாண்டானை நோக்கி, நீ வழிபடும் இறைவியை அவையின் முன் வரவழைத்துக் காட்டுக எனக்கூறினான். சம்பந்தாண்டான் இறைவியை அவையின்கண் வரவழைக்கப் பலவாறு முயன்றும் இயலா தாயிற்று. பின்னர் அருணகிரிநாதர் முருகனை நினைத்து, ‘அதலசேட னாராட” எனத் தொடங்கும் திருப்புகழைப் பாடி வேண்டினார். முருகப்பெருமான் அருணகிரியாரின் உண்மையன்பினைக் கண்டு இரங்கி அவைமுன் திருக்கை வேல் கொண்டு மயில்மீது தோன்றிக் காட்சியளித்து மறைந்தார். தோல்வியுற்ற சம்பந்தாண்டான் நாணமுற்றுத் தலைகவிழ்ந்து அவையை விட்டு வெளியேறினான்.
பல திருக்கோயில்களுக்கும் செல்லுதல் : (திருவருணை முதல் தில்லை வரை)
திருவருள் பெற்ற திருவருணைத் திருவூரில் பல ஆண்டுகள் இருந்து தவம் செய்தலோடு திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி மகிழ்ந்த அருணகிரிநாதர் முருகக் கடவுள் உறையும் பல திருவூர்களுக்கும் சென்று வழிபாடு செய்ய நினைத்தார். திருவண்ணாமலையினின்றும் புறப்பட்டு அடுத்துள்ள திருக்கோவலூரை அடைந்தார். பின்னர்ச் சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் ஆட்கொண்ட திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்று வழிபாடு செய்தார். அவ்வூரில் முருகப் பெருமானுடைய நடனத்தைக் கண்டு வழிபட்டார்.
பின்பு திருநாவலூர், திருவாமூர், வடுகூர், துறையூர் இவற்றை வணங்கித் திருவதிகையை அடைந்தார். பின்னர்த் திருப்பாதிரிப்புலியூர், திருமாணிகுழி என்னும் திருவூர்களை வணங்கித் தில்லை நகர் சென்று சேர்ந்தார்.
தில்லைக் கோயிலின் பல இடங்களிலும் கோபுரவாயில்களிலும் உள்ள முருகப் பெருமான்மீது பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியாடி மகிழ்ந்தார். பலவண்ணங்களில் பல பாடல்களைப்பாடி நீண்டகாலம் அங்குத் தங்கியிருந்தார்.
தில்லையில் தங்கியிருந்தபோது அருகில் உள்ள திருவேட்களம், நெல்வாயில் என்னும் சிவபுரி முதலிய திருவூர்களை வணங்கினார். பின்பு விருத்தாசலம் அடைந்து அத்திருவூரின் பெருமைகளைத் தம் திருப்புகழ்ப் பாடல்களில் அமைத்துப் பாடினார். தில்லை, முதுகுன்றம், திருமறைக்காடு முதலிய தமிழ்ப் பெயர்கள் அருணகிரியார் காலத்து, சிதம்பரம், விருத்தாசலம், வேதாரணியம் என வடமொழிப் பெயர்களால் வழங்கப்பட்டன என்பதை அறியலாம். இங்ஙனமே பல ஊர்ப் பெயர்களும், மக்கள் பெயர்களும், பிற பெயர்களும் வடமொழியில் பெயர்த்துப் பிற்காலத்தில் வழங்கப்பட்டன. பின்னர் அருணகிரிநாதர் தில்லையினின்றும் புறப்பட்டு, கூடலையாற்றூர், எருக்கத்தம்புலியூர், திருமுட்டம் முதலிய திருவூர்களில் உள்ள முருகப்பெருமானை வழிபட்டுத் திருப்புகழ் பாடினார். திருமுட்டத்துத் திருமாலையும் தம் பாடல்களில் புகழ்ந்து கூறினார்.
பின்பு கடம்பூர், ஆச்சாபுரநல்லூர், மயேந்திரப்பள்ளி என்பனவற்றை வணங்கிக் கொண்டு சீகாழியை அடைந்தார்.
சீகாழி முதல் திருவாரூர் வரை :
திருஞானசம்பந்தர் பிறந்த திருவூராதலின் சீகாழியில் பல நாள் அடிகள் தங்கி வாழ்ந்தனர். திருஞானசம்பந்தர் முருகப்பெருமானே என நினைக்கும் எண்ணமுடைய அடிகள் அத்திருவூரின் பெருமைகளையும் திருஞானசம்பந்தருடைய பெருமைகளையும் வாயாரப் புகழ்ந்து பாடினார். பின்னர்ச் சீகாழியினின்றும் அரிதின் நீங்கிக் காவிரிப்பூம்பட்டினம், கரியவனநகர் இவற்றைத் தொழுது திருமண்ணிப் படிக்கரைக்கு வந்தார். இவர் திருமண்ணிப் படிக்கரையில் தங்கியிருந்தபோது ஒருநாள் இரவு இவர் கனவில் முருகப்பெருமான் வீரக்கழலும், கடப்பமாலையும் வேலும் விளங்க மயில்மிசைத் தோன்றியருளினார். “திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள மேலைவயலூர் என வழங்கும் செய்ப்பதியில் உள்ளோம், நமது திருப்புகழை நாடோறும் பாடும் அன்பை உனக்கு அவ்வயலூரில் அளிப்போம். நீ அங்கு வந்து சேருக” எனக் கட்டளையிட்டு மறைந்தார். துயில் நீங்கி எழுந்த அருணகிரிநாதர் மிக்க மகிழ்ச்சியடைந்து வயலூரை விரைவிற் சென்றடைய விருப்பினரானார்.
அதன்பின் புள்ளிருக்கு வேளூரை அடைந்து “முத்துக்குமாரன்” எனப் பெயர்கொண்டு விளங்கும் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். அவ்வூரின் பெருமைகளைத் திருப்புகழில் பாடினார். பின்னர்த் திருக்குறுக்கை, பொன்னூர் என்னும் திரு அன்னியூர் இவற்றை வணங்கி மாயூரத்தை அடைந்தார்.
பின்னர்த் தான்தோன்றியப்பர் என்னும் திருப்பெயருடன் இறைவன் உறையும் இடமான ஆக்கூரையும், அடுத்த திருக்கடவூரையும் வணங்கினார்.
கடற்கழிக் கரையில் உள்ள திருவிடைக்கழி என்னும் திருவூரை அடைந்து குராமர நிழலில் இருக்கும் முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடினார். முத்திதரும் திருவூர், திருவிடைக்கழி என்பதனைக் குறிப்பிட்டார். அதன்பின் திருப்பறியலூர், வழுவூர், கந்தன்குடி, திலதைப்பதி, அம்பர், அம்பர் மாகாளம், திருநள்ளாறு, கன்னபுரம், திருமருகல், திருச்செங்காட்டங்குடி, திருவிற்குடி, விசயபுரம் என்னும் திருவூர்களில் உறையும் முருகப்பெருமானை வழிபட்டுத் திருவாரூரை அடைந்தார்.
திருவாரூர் முதல் திருமறைக்காடு வரை:
திருவாரூரில் தங்கியிருந்து தம் திருப்புகழில் மனுநீதிச் சோழனுடைய நீதிமுறையைச் சிறப்பித்துப் பாடினார். சிக்கல், நாகப்பட்டினம், தேவூர், எட்டிகுடி (எட்டுக்குடி), வலிவலம், கைச்சினம், தண்டலை நீணெறி என்னும் திருவூர்களை வணங்கிப் பின் திருமறைக்காடு (வேதாரணியம்) வந்து சேர்ந்தார்.
திருமறைக்காடு முதல் கும்பகோணம் வரை:
திருத்தணி, செந்தில், பழநி என்னும் திருவூர்களைப் போலச் சிறந்ததும் இராமர் இராவணனைக் கொன்ற தீவினை நீங்க வழிபட்டதும் ஆகிய திருமறைக்காடு சிறந்த திருவூராதலின் அதனை வழிபட்டு, கோடிக் குழகர் கோயிலையும் வழிபட்டார். பின்பு எண்கண், குடவாயில், திருவாஞ்சியம், திரியம்பகபுரம், கூந்தலூர், திருவீழிமிழலை இவற்றை வணங்கித் திருவாவடுதுறை அடைந்தார்.சொற்பிழை வாராது துதிக்க வேண்டும் என்னும் கருத்தினை விளக்கிப் பாடினார்.
பின்னர் திருப்பந்தணை நல்லூர், மருத்துவக்குடி, திருவிடை மருதூர், திரிபுவனம் என்னும் திருவூர்களை வணங்கிய பின் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார். தம் மனக்கவலை தீர்க்கும்படி வேண்டினார். பின்பு கும்பகோணத்தை அடைந்தார்.
கும்பகோணம் முதல் சுவாமிமலை வரை :
கும்பகோணத்தில் உள்ள சோமீச்சுரத்தையும் வீர சைவ மடமாகிய பெரிய மடத்து முருகனையும் பாடினார். ஆடுதுறை, சிவபுரம், கொட்டையூர், திருப்புறம்பயம், சத்திமுத்தம், பழையாறை, திருவலஞ்சுழி என்னும் திருவூர்களை வணங்கினார். பின்னர்ச் சுவாமிமலைக்கு வந்து சேர்ந்தார்.
சுவாமிமலை முதல் திருச்செங்கோடு வரை :
சுவாமிமலை முருகன்மீது திருப்புகழ் பாடி வாழ்ந்தபின் காவளூர், தஞ்சாவூர் ஆகியவற்றில் இறைவனை வணங்கினர். தஞ்சாவூர்க் கோபுரத்தின் அழகு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. பின்னர், திருவையாறு சென்று சித்திரை முழுநிலா நாளில் நடைபெற்ற ஏழூர் சுற்றுகை என்னும் விழாவினைக் கண்டு மகிழ்ந்தார் புகழ்ந்து பாடினார். கண்டியூர் முதலியவற்றை வணங்கியபின் பூவாளூருக்கு வந்தனர்.
பூவாளூரை வழிபட்டபின் திருமாந்துறை, வாலிகண்டபுரம், திருநெல்வாயில் அரத்துறை, வேப்பஞ்சந்தி ஆகியவற்றை வணங்கினர். பின்னர்க் கொல்லிமலை, தீர்த்தகிரி, கனகமலை, கொங்கணகிரி ஆகியவற்றில் இறைவனை வணங்கினர்.
திருச்செங்கோடு முதல் திரிசிராப்பள்ளி வரை:
திருச்செங்கோட்டு மலை மீதேறி அழகுமிக்க முருகப்பெருமானை இரு கண்களாலும் கண்டு மகிழ்ந்தார். மேலும் தமக்கு ‘நாலாயிரங் கண் படைத்திலனே அந்த நான்முகனே” என்று பாடினார். கணிகையரைக் கண்டு கலங்காத சிந்தை தமக்கு அளிக்க வேண்டுமென இரந்து பெற்றார். திருச்செங்கோடு மறை வழிபட்ட ஊர் ஆதலின், மனமுருகி அதனை வழிபட்டார். பின்பு, பவானி (திருநணா), பாண்டிக் கொடுமுடி, திருப்பராய்த்துறை என்னும் திருவூர்களை வணங்கிய பின் திரிசிராப்பள்ளியை வந்து அடைந்தார்.
திரிசிராப்பள்ளி மலையழகைக் கண்டார். அந்த மலையழகில் முருகனைக் கண்டார். சிராப்பள்ளி எனக் கூறுவார் உள்ளத்துக் குடி கொள்பவன் முருகன் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். வயலூருக்குச் சென்று பொய்யாக் கணபதியை வழிபட்டார் . பின்னர் முருகப்பெருமான் அழைக்க அவர் அருளால் விராலிமலைக்குச் சென்று வழிபட்டார். அதன் பின்னர் கொடும்பாளூரையும் இடர் நீக்கும் கடம்பந்துறை முதலிய திருவூர்களையும் வழிபட்டார். பின்னர் நெருவூர், வெஞ்சமாக்கூடல், புகழிமலை ஆகியவற்றை வணங்கிச் சென்னிமலைக்கு வந்தார். இவருடைய பாடலுக்குகந்த சென்னிமலையாண்டவன் படிக்காசு அளித்தார். பின்னர் இவர் விசயமங்கலம் திருமுருகன் பூண்டி, அவிநாசி, திருப்புக்கொளியூர் ஆகிய திருவூர்களில் வழி பாடு செய்தார்.
ஞானமலை, குருடிமலை ஆகிய காடு அடர்ந்த பகுதிகளிற் சென்றபோது, வழிதப்பி இவர் திகைத்து வருந்தினார். அப்பொழுது “பயந்த தனிவழிக்குத் துணை” வரும் முருகன் வழி காட்டி அழைத்துச் சென்றான். வேலாயுதம் அவருக்கு எப்புறத்தும் நின்று இரவு பகல் துணை செய்தது. பின்னர்ப் பேரூரை அடைந்தார்.
பேரூரில் பட்டி முனிவரை ஆட்கொண்டு, அவர் காணச் சிவபெருமான் கொட்டி நடனம் ஆடிய சிறப்பினைத் தம் திருப்புகழில் அமைத்துப் பாடினார். பின்னர், வடகொங்கு நாட்டில் உள்ள எழுகரைநாடு என்னும் திருவூரையும் தென்சேரிகிரி, பட்டாலி சிவமலை இவற்றிலுள்ள முருகனையும் வழிபட்டார். பின்னர் சிங்கை, ஊதிமலை, சீரனூர், ஆய்க்குடி ஆகியவற்றை வணங்கிப் பழனி என்னும் ஊரை அடைந்தார்.
பழனி முதல் மதுரை வரை:
பழனிமலையாண்டவனையும் அடிவாரத்தில் உள்ள திருவாவினன் குடியையும் வழிபட்டார். பழனியில் வாழ்ந்த காலத்தில் வீரை நகரில் வாழ்ந்த கலிசைச் சேவகன் என்றும் காவேரி சேவகன் என்றும் வழங்கப்பெற்ற வள்ளலின் நட்பு ஏற்பட்டது. அவ்வள்ளலுடைய கொடைத் தன்மையையும் இறை பற்றினையும் புகழ்ந்து இவர் மனமாரப் பாடியுள்ளார். பழனியிலும் அதனை அடுத்த ஊர்களிலும் பலநாள் தங்கியிருந்தபோது அத் திருவூர்கள்மீது இவர் தொண்ணூற்றாறு பாடல்களைப் பாடினார்.
பின்னர் அடிகள் பூம்பறை, திருக்குளந்தை, தனிச்சயம், திருவேடகம் இவற்றை வணங்கி மதுரைக்கு வந்து சேர்ந்தார்.
மதுரை முதல் திருச்செந்தூர் வரை :
மதுரையில் சங்கிலி மண்டபத்தில் (கிளி மண்டபத்தில்) வீற்றிருக்கும் முருகவேளையும் வழிபட்டார். திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என்னும் படைவீடுகளையும் பின்னர்த் திருவாதவூர், திருநெல்வேலி ஆகியவற்றையும் வணங்கி நீண்ட காலமாகக் காண விரும்பிய திருச்செந்தூரை அடைந்தார்.
திருச்செந்தூர் முதல் ஈழநாடு வரை:
செந்தூர் முருகனைக் கண்குளிர, மனங்குளிரக் கண்டுமகிழ்ந்தார். திருச்செந்தூரின் அழகினையும் முருகன் அருள்புரியும் சிறப்பையும் வியந்து புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார். இவ்வூரில் அருணகிரியாருக்கு முருகன் குழந்தை வடிவில் வந்து நடனக்காட்சி வழங்கினார் .
வில்லிபுத்தூரார் என்னும் சிறந்த புலவர் புலமையில் தம்மிடம் தோற்றவரை அழைத்து அவர்தம் காதுகளை அறுத்துத் துண்டிப்பது வழக்கம். ஒருமுறை அருணகிரியாராகிய இவரோடு அவர் வாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது இவர் கந்தரந்தாதி என்னும் நூலைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு செய்யுளுக்கும் வில்லிபுத்தூரார் உடனுக்குடனே உரை கூறிவந்தார். 54 ஆவது செய்யுளாகிய ‘திதத்த’ என்று தொடங்கும் செய்யுளைப் பாடியபோது வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது தோல்வியுற்றார். ஆயினும் இவர் அவரைத் தண்டியாது அறிவுரை கூறி, அவர் கையில் இருந்த குறட்டினை எறியச் செய்தார். அதனால் ‘கருணைக்கருணகிரி” என்னும் புகழுக்கு உரியவரானார். தம்மைச் செருக்கு என்னும் நோய் பற்றாதிருக்குமாறு முருகனை வேண்டினார்.
திருச்செந்தூர்ப் பெருமானைவிட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து நாங்குநேரி என்று வழங்கப்பெறும் புருடமங்கை என்னும் இடத்தில் உறையும் முருகனை வழிபட்டார். பின்னர் வள்ளியூரை வணங்கினார்.
ஈழநாட்டுத் தலங்கள்:
கடல்கடந்த ஈழ நாட்டிற்குச் சென்று அங்குள்ள திருவூர்களான அருக்கொணாமலையையும் (நகுலேஸ்வரம்), கண்டியையும் (கதிர்காமம்), திருக்கோண மலையையும் (திரிகோணமலை) வழிபட்டார். பின் தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்தார்.
பொதியமலை (பாபநாசம்) முதல் திருப்பெருந்துறை வரை:
அடிகள் பொதியமலையை வணங்கியபின் குற்றாலத்தையும் இலஞ்சியையும், தென்காசிக்கு அருகில் உள்ள திருமலையையும் வழிபட்டார். பின்னர்க் கழுகுமலை என வழங்கும் முருகுமலை, சிவகாசி, கொடும்பாளூர், திருவுத்தரகோசமங்கை, இராமேச்சுரம் ஆகியவற்றை வணங்கித் தனுக்கோடியை அடைந்தார். பின்பு திருவாடானை, இராச கெம்பீர வள நாட்டுமலை, திருப்புத்தூர், விநாயகமலை, பிரான்மலை ஆகிய இடங்களில் வழிபாடு செய்தனர். பிரான்மலைக்குக் கொடுங்குன்றம் என்ற பெயரும் உண்டு. இத்திருவூரில் முருகன் இவருக்கு நடனக்காட்சியளித்து அருள்புரிந்தார். பின்னர் இவர் குன்றக்குடியை வழிபட்டுத் திருப்பெருந்துறையை அடைந்தார்..
திருப்பெருந்துறை முதல் திருவண்ணாமலை வரை :
திருப்பெருந்துறையினை வழிபட்டபின், திருக்களர், பெருங்குடி, இஞ்சிகுடி, என்னும் ஊர்களை வணங்கினார். பின் முன்பு வழிபட்ட சில ஊர்களை மறுபடியும் வணங்கினார். திருநாகேச்சுரத்தை வணங்கியபின் மாயூரத்தை அடுத்த குற்றாலம் என வழங்கும் திருத்துருத்தியை அடைந்தார்.
முருகன் இவர் கனவில் தோன்றி “நீ முன்னர் இருமுறை வேண்டியபடி உன் தோளில் நம் வேற் பொறியும் மயிற் பொறியும் இட்டோம்” எனக் கூறி மறைந்தார். இவர் விழித்தெழுந்து தம் தோளில் வேல் அடையாளமும் மயில் அடையாளமும் இருக்கக்கண்டு மகிழ்ந்து வழிபட்டார். கந்தரனுபூதிப் பாடல்கள் சிலபாடினார்.
பின்னர்த் திருத்துருத்தியினின்றும் புறப்பட்டுச் சிதம்பரம், திருமுதுகுன்றம் என்னும் ஊர்களை மறுமுறையும் பணிந்து, தம்மை முருகன் முதலில் ஆட்கொண்ட திருவண்ணாமலையை அடைந்தார்.
திருவண்ணாமலை முதல் காஞ்சிபுரம் வரை :
திருவண்ணாமலையிற் சில காலந் தங்கியபின் தாம் காணாதிருந்த வேறுபல திருவூர்களை வழிபட விரும்பிப் புறப்பட்டார். செஞ்சியையும், திருவாமாத்தூரையும் வழிபட்டார். திருவக்கரை, மயிலம், பேறைநகர் (பெரும்பேறு) இந்தம்பலம் என்னும் திருவூர்களை வணங்கிப் பின் வளவாபுரி எனப்படும் செய்யூர் (சேயூர்) அடைந்து வழிபட்டார். பின்பு மதுராந்தகத்தையும் வடதிருச்சிற்றம்பலத்தையும் உத்திரமேரூரையும் வணங்கினார்.
பின் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், திருக்கச்சூர், இளையனார்வேலூர் இவற்றை வணங்கிக் காஞ்சி மாநகரை அடைந்து பணிந்தார்.
காஞ்சிபுரம் முதல் வள்ளிமலை வரை :
காஞ்சி மாநகரில் அம்மை முப்பத்திரண்டு அறங்களைச் செய்த பெருமையைப் புகழ்ந்து பாராட்டிப் பாடினார். பின்னர் ஆண்பனை பெண்பனையாக மாறிய சிறப்புடைய திருவோத்தூரை அடைந்து வணங்கி, வாகை, காமத்தூர் என்னும் திருவூர்களை வணங்கிப் பின் காஞ்சியை அடைந்தார். பின்னர் வல்லக் கோட்டை என வழங்கும் கோடை நகரையும் மாடம்பாக்கம், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், ஆண்டார் குப்பம் என்பனவற்றையும் வணங்கினார். பின்னர்ச் சிறுவை என்னும் ஊரை அடைந்தார். இராமபிரானுடைய மைந்தர் இருவர் (லவ குசர் என்பவர்கள்) தம் தந்தையை அறிந்து கொள்ளாமல் அம்பெய்து போர் செய்த ஊர் சிறுவை என்பதை விளக்கிப்பாடினார்.
பின்னர்க் கோயம்பேட்டை, பாடி, திருமுல்லைவாயில், திருவேற்காடு, பழையனூர், திருவாலங்காடு என்னும் ஊர்களை வணங்கினார். அதன் பின் முள்வாய், வேப்பூர், ஒடுக்கத்துச் செறிவாய், இராயவேலூர், விருஞ்சிபுரம், திருவலம் என்னும் ஊர்களை வணங்கியபின் வள்ளிமலைக்கு வந்தார்.
வள்ளிமலை, திருத்தணி:-
வள்ளிமலையிற் பல இடங்களிலும் சென்று முருகன் வள்ளியுடன் விளையாடிய இடமென எண்ணிப் பெரிதும் மகிழ்ந்தார். யான் எனது என்னும் பற்றுக்களை விட்டவர்க்கு எளியவன் முருகன் என்னும் மறைபொருளைத் தமக்கு முருகன் உள்ளத்துணர்த்தியதாக உணர்ந்து கூறினார். “கல்வி கரைகண்ட புலவோன்” என முருகன் புகழை எடுத்துரைத்தார்.
பின்னர்த் திருத்தணிகைக்கு வந்தார். தணிகை வேலனுடைய அழகும் தணிகைமலையின் அழகும் அவர் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. இதுகாறும் தாம் வந்து திருத்தணிகை முருகனை வழிபடாது இருந்த பிழையை நினைத்து வருந்தினார். மனம் உருகினார். திருத்தணிகையைப் பலவாறு வியந்து பாராட்டினார். முருகன் திருமணக் கோலத்தோடு இருக்கும் திருப்பதியெனப் புகழ்ந்தார். இப்பதியில், அருணகிரியார்க்கு முருகப் பெருமான் தேவிமார் இருவருடன் மயில் மீதமர்ந்து காட்சியளித்தார்.
வெள்ளிகரம் முதல் திருப்பருப்பதம் வரை :
திருத்தணிகையிலிருந்து அடிகள் வெள்ளிகரம் என்ற ஊரை அடைந்தார். அழகிய சந்தப் பாடல்கள் பாடி வழிபட்டபின் திருவேங்கடம் என்னும் திருப்பதியை அடைந்தார். திருப்பதியில் அடிகள் காலத்தில் திருமால் கோயிலும் முருகன் கோயிலும் இருந்தன என்பது அடிகள் கூற்றால் அறியப்படுகிறது. ஒரு காலத்து முருகப் பிரான் பார்வதி தேவியாருடன் முனிந்து பிலத்தின் வழியே வந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கடத்துக்கு வந்த நிகழ்ச்சி திருவேங்கடத்துப் பதிகத்தில் குறிக்கப் படுகிறது.
‘குகை வழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே” என்னும் அடியால் இது தெரிகிறது. ‘வேண்டிய போ தடியர் வேண்டிய போகமது வேண்டவெறாதுதவு பெருமாளே” என்ற அடியும் நினைவுகூர்தற்குரியது.
திருவேங்கடமலையிலிருந்து அடிகள் திருக்காளத்திக்கு வந்தார். தென் கயிலாயம் அஃது எனப் போற்றினார். பின்னர்த் திருப்பருப்பதம் என்னும் காடு அடர்ந்த மலையை அடைந்தார்:
வடநாடு:
பின்னர் வடநாடு நோக்கிச் சென்று காசிநகரத்தை அடைந்தார். பின்னர் அரித்துவாரம் எனப்படும் மாயாபுரியையும் வழிபட்டார். பஞ்சாப் மாநிலத்தில் சரசுவதி ஆற்றங்கரையில் உள்ள வயிரவி வனத்து வடிவேலனை வாழ்த்தினார். அடைதற்கரிய திருக்கயிலையை நோக்கி, இருந்த இடத்திலேயே வழிபட்டார். பின்னர்த் தெற்கே திரும்பி, சகந்நாதம், விசுவை என்னும் விசாகப்பட்டினம் முதலிய திருவூர்களை வழிபட்டார். பின்னர்த் திருத்தணிகையடைந்து அங்கேயே தங்கி வாழ்வதற்கு அருள் புரியும்படி முருகப்பிரானிடம் வேண்டினார். அதன்பின்னர்த் திருத்தணிகையினின்றும் புறப்பட்டுத் திருவண்ணாமலை நோக்கிச்செல்லும்போது வழியில் ஆரணியைச் சேர்ந்த புத்தூரை அடைந்தார். புத்தூரில் சிறந்த அடியாராகிய சோமநாதன் என்பவர் அண்ணாமலையாரை உயிர்த்துணையாகக் கொண்டு காலந்தவறாது பூசித்து வந்தார். அவருடைய மடத்தில் உள்ள முருகப் பெருமானை இவர் வழிபட்டார். பின்பு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்குத் தங்கியிருந்தபோது ஆறுபதிகளையும் மற்றுமுள்ள திருவூர்களையும் மனத்திற்கொண்டு சந்தக்கவிகள் பலபாடி மகிழ்ந்து மனம் உருகினார்.
கிளி வடிவம் பெற்றது:
அடிகள் திருவண்ணாமலையில் இருந்த காலத்து முன்னர் வாதில் தோற்று நாணமடைந்த சம்பந்தாண்டான் பின்னரும் பல சூழ்ச்சிகள் செய்தான். பிரபுடதேவ மாமன்னன் கூறிய வேண்டு கோளைக் கேட்டு அருணகிரிநாதர் கற்பக நாட்டு நன்மலராகிய பாரிசாத மலரைக் கொண்டுவர இயைந்தார். தாம் பெற்ற சித்திகளுள் ஒன்றாகிய “கூடு விட்டுக் கூடுபாய்தல்” என்ற முறையால் தம் பரு உடம்பைத் திருவருணைக் கோபுரத்தில் ஒரு மறைவிடத்தில் வைத்துத் தம் உயிரை ஒரு கிளியின் உடலிற்செலுத்திக் கற்பகநாடு அடைந்தார். அவ்வேளையில் சம்பந்தாண்டான் அடிகள் உடல் இருக்கும் இடத்தைக் கண்டு, அவர் இறந்து விட்டார் என மன்னனிடம் கூறினான். அது கேட்ட மன்னன் உண்மை யுணராது அவ்வுடலைச் சுடலையில் தீக்கிரையாக்குமாறு செய்தான். கிளிவடிவத்தில் சென்ற அடிகள் பாரிசாத மலர் கொண்டு வந்தார். அதனைக் கண்ட பின் மன்னன் தான் செய்த தவறான செயலை நினைத்து வருந்தினான்.
தமது மனித உடல் எரிக்கப்பட்டதை அடிகள் அறிந்தார் “எம் உடற்சிறையை இறைவன் அழிப்பித்தது முறையேயாகும்” என மகிழ்ந்து திருத்தணிகைக்குச் சென்று தணிகை நாயகர் திருக்கையில் தங்கிவிட்டனர். அடிகள் கிளி வடிவம் பெற்ற பின் பாடிய நூல் ‘கந்தரனுபூதி’ என்றும் அடிகள் கிளியுருவத்துடன் திருத்தணிகை முருகன் திருக்கையிலும், உண்ணாமுலை அம்மையின் திருக்கையிலும் தங்கி வாழ்கின்றனர் என்றும் சான்றோர் கூறுவர்.
“அருணகிரிநாத அடிகள் திருவடி வாழ்க”
நன்றி:-
வ.சு.செங்கல்வராய பிள்ளை
திருப்புகழ் கிடைத்த வரலாறு
அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல் திருப்புகழ் ஆகும். நமக்குக் கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்களில் அமைந்துள்ள சந்தவகை 1008. திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை …..என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்ப்பொழிவுகளைத் தொடங்குவார்.
அத்தகைய திருப்புகழ் நமக்குக் கிடைக்கத் தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்ற தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது. அந்த போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.
திருப்புகழ் நமக்குக்கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது. அவர் குறித்து ஒரு கட்டுரையை “இந்து தமிழ் திசை” 09.08.14 அன்று வெளியிட்டிருந்தது. அதை இப்போது பார்ப்போம்.
வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை, தீட்சிதர்களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய ‘தாது மாமலர்” எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.
‘தாது மலர் ……………..
வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
…………………………..
(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)
தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து, ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.
அரசாங்கப் பணிகளுக்கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.
உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவு செய்துள்ளார்.
ஓலைச்சுவடிகளின் குறைகளைக் களைந்து சீர் செய்வதற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.
திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.
வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும் புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.
வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது
நன்றி:- இந்து தமிழ் திசை